ஸ்ரீ அரவிந்தரின் உபதேசம்
யூடியூபில் பார்க்க (YouTube): https://youtu.be/cXtCazKPMT0
ஸ்ரீ அரவிந்தரின் உபதேசம் இந்தியாவின் பழமையான ஞானிகளின் மெய்யுரைகளிலிருந்து தொடங்குகிறது. அவர்கள் கூறியது போல, பிரபஞ்சத்தின் தோற்றங்களுக்குப் பின்னால் ஒரு உண்மை உள்ளது — அது இரண்டற்ற, நித்தியமான, எல்லாப் பொருள்களின் ஆத்மாவான மெய்யுணர்வு. அனைத்து உயிர்களும் அந்த ஒரே ஆன்மா மற்றும் உணர்வினால் ஒன்றாக இணைந்துள்ளன, ஆனால் மனம், வாழ்க்கை மற்றும் உடலில் அவர்களின் தன்மை மற்றும் மூல உணர்வைப் பற்றிய அறியாமை காரணமாக பிளவுபட்டுள்ளது. இந்த பிரிவுணர்வின் திரையை அகற்றி ஒரு அகப்பயிற்சி ஒழுக்கம் மூலம் நம்முள்ளும், எல்லாப் பொருள்களினுள்ளும் உள்ள தெய்வீகத்தையும், உண்மையான ஆத்மாவையும் உணர முடியும்.
ஸ்ரீ அரவிந்தர் கூறுவது, இந்த இரண்டற்ற மெய்ப்பொருள் மெய்யுணர்வு இங்கு பொருளில் அடங்கியுள்ளது. அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வழி பரிணாம வளர்ச்சி முறை. விழிப்புணர்வு, முதலில் விழிப்புணர்வில்லாததாகத் தோன்றும் பொருள்களிலிருந்து துவங்குகிறது; பிறகு அது தானாகவே உயர்நிலைகளுக்கு வளர முயல்கிறது, மேலும் அது விரிவடைந்து, மேம்பட்டு, பூரண நிலையை நோக்கி செல்கிறது. உணர்வின் மலர்ச்சியில் உயிர் முதற்படியும், மனம் இரண்டாம் படியும் ஆகும். ஆனால் வளர்ச்சி மனதுடன் முடிவடைவதில்லை; அது அதனினும் உயர்ந்த ஆன்மீக அதிமன விழிப்புணர்வாக மலர்ச்சி பெற காத்திருக்கிறது. அடுத்த கட்ட வளர்ச்சி என்பது உணர்வு பெற்ற வாழ்வின் முதன்மை சக்திகளாக அதிமனமும் ஆன்மாவும் இருப்பதாகும். அப்போதுதான் பொருள்களில் அடங்கிய தெய்வீகம் முழுமையாக மலர்ச்சி பெற்று, நம் வாழ்வு பூரணத்தை அடைவது சாத்தியமாகும்.
பரிணாம வளர்ச்சியின் முந்தைய படிகளில், தாவர மற்றும் விலங்குகளில் விழிப்புணர்வில்லாத இயற்கையின் செயல்பாடாக இருந்தன. ஆனால் மனிதனில், இயற்கை விழிப்புணர்வுள்ள ஒரு கருவியாக வளர முடியும். ஆனால் இது மனதின் விருப்பத்தால் மட்டுமே முழுமையாக சாத்தியமாகாது, ஏனெனில் மனம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பிறகு ஒரு வட்டத்திற்குள்ளேயே சுழலும். எனவே ஒரு திருப்பம் வேண்டும் — மனம் ஒரு உயர்ந்த தத்துவமாக மாறும் வகையிலான திருப்பம். இந்த முறை பழமையான அகப்பயிற்சி ஒழுக்கம் மற்றும் யோகா பயிற்சியில் காணப்படுகிறது. முந்தைய காலங்களில், உலகத்திலிருந்து விலகி, ஆன்மாவின் உச்ச நிலைக்கு செல்லும் முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஸ்ரீ அரவிந்தர் கூறுவது, ஒரு உயர்ந்த தத்துவம் மேலிருந்து கீழிறங்கி, ஆன்மாவை உலகத்திலிருந்து விடுவிக்காமல் உலகத்திலேயே விடுவிக்கும். அது மனதின் அறியாமையை அல்லது அதன் குறுகிய ஞானத்தை மாற்றி, ஒரு மனங்கடந்த மெய்யுணர்வைக் கொண்டு வரும். அது உள்ளார்ந்த ஆன்மாவிற்கு ஒரு போதுமான கருவியாக இருந்து, மனிதனின் உள்ளுணர்வு மட்டுமில்லாமல், இயங்கு நிலையிலும் தனது உண்மையை கண்டறிந்து, தன் விலங்கு-மனித நிலையிலிருந்து ஒரு தெய்வீக இனமாக வளர சாத்தியப்படுத்தும். இந்த நோக்கத்திற்காக, யோகாவின் அகப்பயிற்சி ஒழுக்கத்தைப் பயன்படுத்தலாம். மனிதனுள் இன்னும் மறைந்திருக்கும் அதிமான தத்துவத்தின் இறக்கம் மற்றும் செயல்பாடுகள் மூலம் இது மனிதனின் அனைத்து பகுதிகளையும் ஒரு திவ்யமாற்றத்திற்காகத் திறக்கச் செய்யும்.
இது உடனடியாக, குறுகிய காலத்தில், அல்லது அதிசய மாற்றத்தால் நிகழ முடியாது. அதிமான இறக்கம் சாத்தியமாகும் முன் அவ்வுண்மையை தேடுபவர்கள் பல படிகளை கடக்க வேண்டும். மனிதன் பெரும்பாலும் தனது புற மனம், வாழ்க்கை மற்றும் உடலில் வாழ்கிறான். ஆனால் அவனுள் அதிகமான சாத்தியங்களுடன் ஒரு ஆழமான உள்ளார்ந்த ஜீவன் உள்ளது. அந்த உள்ளார்ந்த ஜீவனை அவன் விழிப்பூட்ட வேண்டும். தற்போது அவன் அதிலிருந்து மிகக் குறைந்த தாக்கத்தை மட்டுமே பெறுகிறான், ஆனால் அது அவனை அழகும், ஒத்திசைவும், சக்தியும், அறிவும் ஆகியவற்றை அடையத் தொடர்ந்து முயற்சிக்க வைக்கிறது. யோகாவின் முதல் செயல்முறை, இந்த உள்ளார்ந்த உயிரின் பரப்புகளைத் திறந்து, உள்ளிருந்து வெளிநோக்கி வாழ்வதும், அவன் தனது உள்ளார்ந்த ஒளி மற்றும் சக்தியின் துணையோடு புற வாழ்க்கையை நடத்துவதுமாகும். இதன் மூலம், அவன் தனது உண்மையான ஆன்மாவை கண்டறிகிறான் — இது மனம், உயிர் மற்றும் உடல் ஆகியவற்றின் வெளிப்புற கலவையல்ல அவற்றின் பின்னுள்ள உண்மையின் வெளிப்பாடு, தெய்வீகக் கனலின் ஒரு பொறி. மனிதன் தனது ஆன்ம நிலையில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும், அதன் உண்மை நோக்கத்தின் இயக்கத்தால் தனது இயல்பின் மற்ற பகுதிகளை சுத்திகரித்து, திசைதிருப்ப வேண்டும். அதை தொடர்ந்து, மேல்நோக்கிய ஒரு திறவும் ஒரு உயர்ந்த தத்துவத்தின் இறக்கமும் நிகழலாம். ஆனால் அதுவும் உடனடியாக முழுமையான அதிமன ஒளி மற்றும் சக்தியாக இருக்காது. ஏனெனில் சாதாரண மனித மனம் மற்றும் அதிமன உண்மை விழிப்புணர்வுக்கு இடையில் பல பரிமாணங்கள் உள்ளன. இந்த இடைநிலைகள் திறக்கப்பட வேண்டும், அவற்றின் சக்திகள் மனம், வாழ்க்கை மற்றும் உடலுக்குள் இறக்கப்பட வேண்டும். அதன் பிறகே உண்மை விழிப்புணர்வின் பூரண சக்தி இயற்கையில் செயல்பட முடியும். இந்த அகப்பயிற்சி ஒழுக்கம் அல்லது சாதனையின் செயல்முறை மிக நீண்டதும் கடினமானதும் ஆகும். ஆனால் அதில் சிறிதளவு முன்னேற்றம் கூட மிகப் பெரிய வெற்றியாகும், ஏனெனில் அது இறுதி முக்தியையும், பூரணத்தையும் சாத்தியமாக்குகிறது.
இந்த நீண்ட பாதையில் பயணிக்க பழைய அமைப்புக்களைச் சேர்ந்த பலவும் இன்றியமையாததாக இருக்கிறது — மனதை ஒரு விசாலமான பரப்புக்கு திறக்கவும், சுயம் மற்றும் எல்லையில்லா பரம்பொருளை உணரவும், “காஸ்மிக் கான்ஷியஸ்னஸ்” என அழைக்கப்படும் விஸ்வ விழிப்புணர்வுக்கு விழித்தெழவும், ஆசைகள் மற்றும் உணர்ச்சிகளை அடக்கவும், துறவு அவசியமில்லை, ஆனால் ஆசை மற்றும் பற்றுதல்களை வென்று, உடல் மற்றும் அதன் தேவைகள், பேராசைகள் மற்றும் இயற்கைத் தூண்டுதல்களை கட்டுப்படுத்துதல் அவசியம் ஆகும். பழைய அமைப்புகளின் ஒரு சேர்க்கை உள்ளது: அறிவின் வழி – பகுத்தறிவின் மூலம் தோற்றத்திலிருந்து மெய்ப்பொருளை பிரித்துக் காணுதல்; பக்தி, அன்பு மற்றும் சரணாகதி போன்ற இதயத்தின் பாதை; மேலும் செயல் வழி – மனதை சுயநல நோக்கங்களிலிருந்து விலக்கி உண்மைக்கும், விசாலமான மெய்ப்பொருள் சேவைக்கும் திருப்புதல். அந்த உயர்ந்த ஒளி மற்றும் சக்தி இயற்கையில் செயல்படும்போது அதற்கு பதிலளிக்கவும், திவ்ய மாற்றத்தை அடையவும் மனிதனின் முழு ஜீவனும் பயிற்சி பெற வேண்டும்.
இந்த ஒழுக்கத்தில், குருவின் ஊக்கமும், கடினமான கட்டங்களில் அவரது வழிகாட்டலும், இருப்பும் இன்றியமையாதது — அத்துணையின்றி இந்த சாதனையை இறுதிவரை செய்து முடிப்பது சாத்தியமாகாது. பல இடையூறுகளும் பிழைகளும் ஏற்பட்டு வெற்றிக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். குரு என்பவர் உயர்ந்த விழிப்புணர்வையும் ஆன்மீக நிலையையும் அடைந்தவர். அவர் அந்த நிலையின் பிரதிநிதி அல்லது அவதாரமாகக் கருதப்படுகிறார். அவர் தனது போதனையால் மட்டுமல்ல, அதிகமாக தனது ஆன்மீக பிரபாவத்தாலும், வாழ்வின் உதாரணத்தாலும், ஆனால் முக்கியமாக தனது அனுபவத்தை மற்றவர்களுடன் பகிரும் சக்தியாலும் உதவுகிறார்.
இது ஸ்ரீ அரவிந்தரின் போதனையும் சாதனை முறையும் ஆகும். அவரது நோக்கம் எந்த ஒரு மதத்தையும் வளர்ப்பதோ, பழைய மதங்களை ஒன்றிணைப்பதோ, புதிய மதத்தை உருவாக்குவதோ அல்ல. ஏனெனில் இவை அனைத்தும் அவரது மைய நோக்கத்திலிருந்து விலகச் செய்பவை. அவரது யோகத்தின் ஒரே நோக்கம் அகவளர்ச்சி — அதை பின்பற்றுபவர்கள் காலப்போக்கில் அனைத்து உயிர்களிலும் ஒரே ஆன்மாவைக் கண்டறிந்து, மனதைத் தாண்டிய உயர்ந்த விழிப்புணர்வை, அதாவது ஆன்மீகமும் அதிமனமும் ஆன விழிப்புணர்வை, வளர்த்துக்கொண்டு மனித இயல்பை உருமாற்றி தெய்வீக இயல்பை அடைவதே ஆகும்.
~ ஸ்ரீ அரவிந்தர்
ஒரு சீடனுக்கான கடிதம், பிப்ரவரி 1934
CWSA தொகுதி 36, சுயசரிதை குறிப்புகள், பக்கம் 547–550
மொழிபெயர்ப்பு: இந்துஜா, அவுர்வில்
யூடியூபில் பார்க்க (YouTube): https://youtu.be/cXtCazKPMT0